டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்

Updated: Nov 17, 2020

டிஜிட்டல் தளம் தொடர்ந்து விரிவடைகிறது. காலத்திற்கேற்ப மாறுகிறது. ஆகையால் பார்வையாளர்களை ஈர்க்க நாம் மேற்கொள்ளும் சந்தைப்படுத்துதல் நுட்பங்கள் எல்லாம், ஆக்கபூர்வமானதாகவும், தனித்துவம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்.

 

ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்துவதில் மிகவும் அடிப்படையான விஷயம் என்னவென்றால், தயாரிப்பை பற்றிய தகவல்களை நுகர்வோரிடம் சரியான இடத்தில், சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது தான். அதாவது அவர்கள் ஏற்கனவே நேரத்தை அதிக அளவில் செலவழிக்கும் இடத்தில், நாம் அவர்களை சென்று அணுக வேண்டும். இன்றைய நாட்களில் மக்கள் அதிக நேரத்தை செலவழிப்பது இணையத்தில் தான். அப்படியானால் சந்தைப்படுத்துவதற்கு சிறந்த வழி டிஜிட்டல் மார்க்கெட்டிங் மட்டுமே.      


தேடுபொறிகள் (Search Engine), சமூகவலைதளங்கள் (Social Media), மின்னஞ்சல் (Email), வலைத்தளம் (Website) என்று பல வழிகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை நாம் மேற்கொள்கிறோம். அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் பெரிய அளவில் சாதிப்பதற்கு முட்டுக்கட்டைகளாக அமைந்து விடுகின்றன. அவற்றை சரியாக கண்டறிந்து ஒழுங்கு படுத்தி விட்டோமென்றால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் நாம் சிறந்த வெற்றியாளர்களாக வலம் வரலாம். எனவே டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும் அவற்றை சரிசெய்யும் வழிகளும் என்ன என்பதைப் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

Read about ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்

புதுப்பிக்கப்படாத இணையதளம்

ஆன்லைனில் இருந்தாலும், ஆஃப்லைனில் இருந்தாலும், எந்த ஒரு வணிகத்திற்கும் இணையதளம் (Website) என்பது தற்போதைய காலத்தில் மிக முக்கியமானது. உலக அளவில் தற்போது 1.5 பில்லியனுக்கும் அதிகமான இணையதளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  நமது இணையதளத்திற்கு நுகர்வோர் வந்து செல்லும் போக்குவரத்து (Website Traffic) அதிகரித்தால், நிறுவனத்தின் விற்பனை மற்றும் வருவாய் அதிகரிக்கும். அதற்கு முதலில் நாம் நமது இணையதளத்தை விளம்பரப்படுத்துவதற்கு முதலீடு செய்ய வேண்டும். இணையதளத்தில் உயர்தரமான உள்ளடக்கங்களை (High Quality Content) பயன்படுத்துதல் மற்றும் அவற்றை தேடுபொறிகளில் (Search Engine) விளம்பரப்படுத்த பணத்தை முதலீடு செய்தல் போன்றவை இணையதளத்தை விளம்பரப்படுத்துவதற்காக சிறந்த வழிகள். SEO, SEM ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியை நாடுதல் அதிக பலனளிக்கும். 


Read about டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்

இலக்குக்கான சந்தையை அறியாதிருத்தல்

நமது வலைதள பக்கங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக, அளவீடுகள் தெரியப்படுத்தினாலும் அந்த பார்வையாளர்கள் நம்முடைய  இலக்குக்கானவர்களா (Target Audience) என்பதை, நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம். வலைதள பக்கங்களில் அதிகரிக்கும் பார்வையாளர்கள், நமது இலக்குக்கு ஆனவர்கள் இல்லையென்றால், நம்முடைய டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலில் ஏதேனும் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பிழைகள் இருந்தால், நம்முடைய டிஜிட்டல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் தளங்களை மறுபடியும் மதிப்பீடு செய்தல் வேண்டும். நம்முடைய உண்மையான இலக்குக்கான பார்வையாளர்களை, கவர்ந்திழுக்க வேண்டிய திருத்தங்களை உடனடியாக செய்தல் வேண்டும்.

சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்தல்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முறையான அணுகுமுறை தேவைப்படுகிறது. குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை சரியான முறையில் நிர்ணயிக்க வேண்டும். டிஜிட்டலில் சந்தைப்படுத்தும் பெரும்பாலானவர்கள், நம்பத்தகாத இலக்குகளை உருவாக்குகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு வணிகம் டிஜிட்டல் மார்க்கெட்டில் ஈடுபடுகிறது என்றால், ஈடுபட்ட முதலாம் ஆண்டிலேயே 500 ஆயிரத்துக்கும் மேலான இலக்குக்கான பார்வையாளர்களை பெறவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தல் சாத்தியமற்றதாகும். இது மட்டுமல்லாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சந்தைப்படுத்தும் பலர், தங்களால் ஈர்க்கப்பட்ட அனைத்து பார்வையாளர்களுமே, தங்களுக்கான விற்பனையாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்றாகும்.  இதற்கான தீர்வு மிகவும் எளிதானது. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் உண்மையிலேயே அடைய முடியும் இலக்குகளை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், மற்றும் நம்முடைய வணிகத்தை போன்றே உள்ள பிற வணிகங்களின் அனுபவங்கள், ஆகியவற்றை ஆராய்ந்து கருத்தில்கொண்டு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.

கிளிக்பைட்களை (Clickbait) உபயோகித்தல்

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதும், அவர்களை உடனடியாக வலைத்தள பக்கத்திற்கு செல்லும் இணைப்பைக் கிளிக் செய்யத் தூண்ட கூடியதுமான, வார்த்தைகளை உபயோகித்து எழுதப்படும் உள்ளடக்கங்களே கிளிக்பைட்டுகள் எனப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் உண்மை தன்மை இருப்பதில்லை. உதாரணத்திற்கு சொல்வதென்றால், நாம் சமூக வலைத்தள பக்கங்களில் இருக்கும்போது காணும் சில விளம்பரங்களில் மற்றும் பதிவுகளில், "இதை பயன்படுத்தினால் நம்பமுடியாத அதிசயம் நடக்கும்", "ஒரே நாளில் 20 கிலோ எடை குறையும்" போன்ற தலைப்புகளில் பதிவிடப்படும் விளம்பரங்களை காணும்போது, அவற்றால் ஈர்க்கப்பட்டு உடனே கிளிக் செய்ய தோன்றும். ஆனால், அந்த இணைப்பை கிளிக் செய்து வரும் தளத்தில் உள்ள உள்ளடக்கம் மிகவும் சராசரி ஆனதாக இருக்கும்.  அதிகமான டிஜிட்டல் சந்தை படுத்துபவர்கள் இந்த உத்தியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதனால்  நிறுவனம் மற்றும் பிராண்டின் நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மை மக்களிடையே குறையும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு பதிலாக, நமது இலக்குக்கான வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மதிப்பை கொடுக்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இணைப்பை கிளிக் செய்து வலைத்தளத்தின் உள்ளே செல்லும்போது, அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனால் இலக்குக்கான பார்வையாளர்கள் ஏமாற்றம் இல்லாத, தரமான உள்ளடக்கத்தைக் காண்பதால், பார்வையாளர்களில் இருந்து வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


சரியான வாய்ப்புகளில் முதலீடு செய்யாதிருத்தல்

பல வணிக நிறுவனங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட போதுமான நபர்களை நியமிப்பது இல்லை. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான கருவிகளை வழங்குவது இல்லை. இதனால் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகவே போகின்றன.  டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் திறமையான மற்றும் வெற்றிகரமான சந்தைப்படுத்துபவராக இருக்க வேண்டுமெனில், நமது டிஜிட்டல் மார்க்கெட்டிங் குழுவானது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி முழுமையாக அறிந்த வல்லுனர்களாகவும், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் வசதிகளும் கொண்டவர்களாகவும், இருத்தல் அவசியம். இதனால் மட்டுமே டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வெற்றி அடையக்கூடிய உத்திகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் முடியும். 

கட்டண விளம்பரங்களுக்காக மட்டுமே செலவு செய்தல்


டிஜிட்டல் சந்தைப்படுத்துவதற்காக செலவிடப்படும் பட்ஜெட்டில், பெரும்பகுதி கட்டணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரங்களுக்காக (Paid Ads) மட்டுமே செலவழிக்கப்படுகிறது. அவற்றைத் தவிர சாத்தியமான மற்றவைகளுக்கு, குறைந்த அளவில் மட்டுமே செலவழிக்கின்றனர்.  நமது பிராண்ட் கூடுதல் பார்வையாளர்களை அடைய வேண்டுமென்றால் மட்டுமே, கட்டண விளம்பரங்களுக்கு அதிக அளவில் செலவிடலாம். நமது பிராண்ட் ஏற்கனவே போதுமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது என்றால், காலப்போக்கில் தானாகவே பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். எனவே கட்டண விளம்பரங்களுக்கு செலவிடும் அதிக தொகையை, தரமான உள்ளடக்கங்களை அமைப்பதிலும், பார்வையாளர்கள் வலைத்தளத்திற்கு வந்தடையும் பக்கங்களை புதுமையான முறையிலும், ஈர்க்கும் வகையிலும் வடிவமைப்பதில் செலவிடலாம்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தனித்துவமான தொடர்பு கொள்ளும் முறையை (Customisation) பயன்படுத்தாது இருத்தல்

எந்த ஒரு வெற்றிகரமான தொழிலுக்கும் அடிப்படையானவர்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமே. அந்தவகையில் வாடிக்கையாளர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலான, தொடர்புகளை ஏற்படுத்தும் செய்திகளை பகிர்ந்து கொள்வது, வாடிக்கையாளர்களை நம்முடன் உணர்வுபூர்வமாக ஒன்ற செய்யும். எடுத்துக்காட்டாக நமது வாடிக்கையாளர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் போன்ற மிக முக்கியமான நாட்களில், அவர்களுக்கு ஆன்லைன் வாழ்த்து அட்டை அனுப்புதல்,  ௭த்தகைய செலவும் இல்லாமல் வாடிக்கையாளர்களுடன் உணர்வு பூர்வமான தொடர்பை அதிகரிக்க உதவும். ஆனால் பல சந்தை படுத்துபவர்கள், இது போன்ற தனிப்பட்ட தகவல் தொடர்புகளை ஏனோ புறக்கணித்து விடுகிறார்கள். நமது பிராண்டை பற்றிய நன்மதிப்பை வாடிக்கையாளர்கள் இடையே உருவாக்குவது என்பது, வெற்றிகரமான தொழிலுக்கு மிகவும் முக்கியமானது.

வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்,  கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை புறக்கணித்தல்

நமது வாடிக்கையாளர்கள் நமக்கு தங்களின் கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பும்போது, அவர்களின் தனிப்பட்ட நேரத்தை செலவழித்து தான் அனுப்புவார்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு  உடனடியாக சரியான முறையில் பதில் அளிப்பது அவசியமானது. புறக்கணிக்கும் ஒவ்வொரு கடிதம் மற்றும் மின்னஞ்சலால், நாம் ஒரு வாடிக்கையாளரை இழக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  குறிப்பாக மின்னஞ்சல்களுக்கு பதில் அளிப்பதற்கான பிரத்தியேக தொழில்நுட்பம் மற்றும் மென்பொருளுக்கு முதலீடு செய்வது மிகவும் நல்லது. இத்தகைய முதலீடு மிகவும் மதிப்புமிக்க முதலீடாகும்.

காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் மென்பொருளில் பணியாற்றுதல்


டிஜிட்டல் மார்க்கெட்டிங் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது மற்றும் மாற்றங்களை சந்தித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்தது. டிஜிட்டல் சந்தை படுத்துபவர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய உத்திகள் மற்றும் கருவிகளை தெரிந்து கொள்ள வேண்டும். பலவகையான ஆன்லைன் படிப்புகள் குறைந்த விலையிலும், இலவசமாகவும் இருக்கின்றன. காலாவதியான மற்றும் பழைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை பயன்படுத்தினால் நமது முயற்சிகள் பயனற்றதாகிவிடும். 

புதிய முறைகளை உபயோகபடுத்த பயனுள்ள பழைய முறைகளை தவிர்த்தல்

ஒரு வணிகத்துக்கு குறிப்பிட்ட மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி வருகின்றார்கள், அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அதிக வாடிக்கையாளர்களை கொடுக்க கூடியதாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் ஒரு புதிய மார்க்கெட்டிங் முறை அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும் எனும் உறுதியுடன் வருகிறது என்றால், அந்த புதிய மார்க்கெட்டிங் முறைக்காக, பலன் தந்த பழைய மார்க்கெட்டிங் முறையை தவிர்த்து விடுதல் என்பது தவறான முடிவாகும். இறுதியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் எத்தகைய தவறுகளையும் எளிதாக திருத்திக்கொள்ள முடியும். எதை உருவாக்க வேண்டும், எதை மாற்றியமைக்க வேண்டும் என்று யோசித்து, சோதித்துப் பார்த்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் ஏற்படும் தவறுகளை தவிர்க்க, திறமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளை கையாள, நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை நம்பலாம். அவர்களின் வழிகாட்டுதலால் சரியான முறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை வெற்றிகரமாக செய்ய வாழ்த்துக்கள்.Related Articles 
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

40 views0 comments