டிஜிட்டல் வணிகத்தை மேம்படுத்தும் மொபைல் ஆப் ௭னும் செயலிகள்

Updated: Nov 19, 2020

மொபைல் ஆப் போன்ற தனிப்பட்ட தொழில்நுட்பங்களின் ஆற்றல், வணிகத்துக்கான புதிய வாய்ப்புகளை திறக்கிறது. புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

 

தொழில் செய்பவர்கள், நிறுவனத்தை நடத்துபவர்கள் என்று யாராக இருந்தாலும், தங்களுடைய தொழிலை, நிறுவனத்தை வெற்றியின் பாதையில் செலுத்துவதை தான் விரும்புவார்கள். அந்த வகையில், ஒரு நிறுவனம் வளர்ச்சி பெற முக்கியமான பங்கு வகிப்பவர்கள் அதன் வாடிக்கையாளர்கள். நிறுவனத்தின் வெற்றிக்கு பின்பற்ற வேண்டிய விதிகளில் முதன்மையானது, வாடிக்கையாளர்களின் தேவைகளின் மேல் முழு கவனம் செலுத்துவது தான். வாடிக்கையாளரின் தேவைகள், நடவடிக்கைகள், புள்ளிவிவரங்களை தெளிவாக தெரிந்துகொண்டு ஆய்வு செய்வது முக்கியமானது. இன்றைய போட்டிகள் நிறைந்த தொழில் உலகில், ஒவ்வொரு நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுடன் அழுத்தமான, நீடித்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழியை கண்டறிவது அவசியமானது. 

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், 80 சதவீத மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்தும் உலகமயமாக்கல் ஆக்கப்பட்ட பின்பு, ஸ்மார்ட்போனின் உதவியால் நமது வாடிக்கையாளர்கள் உலகின் எந்த மூலையிலும் இருக்கலாம். இதனால் தான் பல நிறுவனங்கள் தற்போது தங்கள் வெற்றிக்கு மொபைல் ஆப்களை (செயலி) பயன்படுத்துகின்றனர். வருங்காலங்களில் இது அதிக அளவிலான வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read about Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்


உங்கள் வணிகத்துக்கு மொபைல் ஆப் ஏன் தேவை?

மொபைல் ஆப் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்கள் வெறும் பொழுதுபோக்குக்காகவும், தகவல் பறிமாற்றத்திற்காகவும் மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், உங்கள் கூற்று முற்றிலும் தவறானது. இணையத்தை மையமாகக்கொண்டு சுழலும் இன்றைய உலகில், ஒரு நல்ல மொபைல் ஆப் நமது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய மொபைல் ஆப்பை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தினால், நமது தொழிலுக்கு பல நல்ல வாய்ப்புகளையும், வெற்றிகளையும் அது பெற்றுத்தரும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது நமது நிறுவனத்திற்கு பொருத்தமான  மொபைல் ஆப்பை உருவாக்குவதும், குறிப்பிட்ட இலக்குக்காக அதை செயல்படுத்துவதும் எளிதாகிவிட்டது. நிறுவனங்கள் ஆர்டர்கள் எடுக்கவும், அவற்றை சரியான முறையில் வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்க்கவும், வாடிக்கையாளர்களின் தரவுகளை பெறவும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் அளிக்கவும், மொபைல் ஆப்கள் மிகவும் வசதியாக உள்ளதால், மொபைல் ஆப்கள் உருவாக்குவதற்கான முதலீடுகள் மிகவும் லாபகரமானவையே.


வணிகத்தில் மொபைல் ஆப்களின் முக்கியத்துவம்

நமது நிறுவனத்திற்கு, சிறந்த, வசதியான, எளிதான மொபைல் ஆப் இருந்தால், அதன்மூலம் பல பார்வையாளர்களை எளிதாக பெற முடியும். அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற முடியும்.

எந்த தடையும் இல்லாமல், நம்முடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பற்றிய தகவல்களை, உலக அளவில் கொண்டு சேர்க்க முடியும். எந்த நாட்டில் இருந்தாலும் இணையவசதி மட்டும் இருந்தால் போதும். எவராயினும் மொபைல் ஆப் மூலம் நம்முடைய தயாரிப்புகளையும் சேவைகளையும் பெற முடியும்.


நமது நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை, தொடர்ச்சியாக மொபைல் ஆப்களின் வழியாக வாடிக்கையாளருக்கு தரமுடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்.  புதிய தயாரிப்புகளை பற்றி உடனுக்குடன் நுகர்வோருக்கு தெரிவிக்க முடியும். தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பற்றிய தகவல்கள் நேரடியாக நுகர்வோரை அடைவதால், வெற்றி அடையும் வாய்ப்பு அதிகமாக ஏற்படும்.

மொபைல் வெப்சைட்டுகளை விட அதிக பயன்பாட்டில் இருக்கும் மொபைல் ஆப்கள்

வாடிக்கையாளர்கள் ஒரு பொருளைப் பற்றியோ அல்லது சேவையைப் பற்றியோ, எந்த ஒரு தகவலை பெறுவதற்கும், நிறுவனத்தின் இணையதளத்துக்கு செல்ல URLஐ டைப் செய்து கொண்டிருக்கும் காலம் மாறிவிட்டது. கடிகாரத்தின் முட்கள் வேகமாக சூழலும் இன்றைய காலகட்டத்தில், மக்கள் எதிலும் எளிதாக அணுகக்கூடிய, விரைவான, தனித்துவமிக்க சேவைகளையே அதிகம் விரும்புகிறார்கள். இதில் எளிதாக அணுகக்கூடிய வகையில், நமது சேவை இருப்பதை கூடுதல் நன்மை என்று வாடிக்கையாளரிடம் கூறமுடியாது. ஏனெனில், ஒரு தயாரிப்பில் இருக்க வேண்டிய முக்கிய அம்சமாக அதை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கடந்த சில வருடங்களாக நிறுவனங்களிடையே மொபைல் ஆப்களுக்கான மதிப்பு உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான நிறுவனங்கள்,  விற்பனையை அதிகரிப்பதற்கும், பிராண்டின் மதிப்பை உயர்த்துவதற்கும், தரமான வாடிக்கையாளர் சேவையை அளிப்பதற்கும்,  மற்ற நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக அமைவதற்கும், எளிதான மற்றும் தேர்ந்த மொபைல் ஆப்களை, தங்கள் நிறுவனத்திற்காக உருவாக்குவதற்கு முதலீடு செய்து வருகின்றன. 

  • 57% டிஜிட்டல் மீடியா பயன்பாடு மொபைல் ஆப்களின் மூலமாகவே நடைபெறுகிறது.

  • சராசரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒருவர், தனது மொபைலில் 80 ஆப்கள் வரை வைத்திருக்கிறார். அவற்றில் 40 ஆப்கள் வரை ஒரு மாதத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறார். 

உலகம் முழுவதிலும் பல்வேறு நிறுவனங்கள் மக்களிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம், இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால்தான் அனைத்து நிறுவனங்களும் தங்களது வெற்றிகரமான தொழில் வளர்ச்சிக்கு, மிகச்சிறந்த ஆப்பை வடிவமைக்க வேண்டி முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

மொபைல் ஆப்களை  மக்கள் அதிகம் பயன்படுத்த காரணம் 


இதற்கு சரியான பதில் எதுவென்றால், பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருப்பது தான். மொபைல் ஆப்கள் நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பயன்படுத்த மிகவும் வசதியாக அமைந்துள்ளன. நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான தகவல்களை, ஆப்களின் மூலம் நுகர்வோருடன் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். பயனாளர்களின் தகவல்களை திரட்டுவதில் நிறுவனங்களுக்கு மொபைல் ஆப்கள் மிகவும் வசதியாக உள்ளன. பயனாளர்களின் தகவல்களை திரட்டுவதில் நிறுவனங்களுக்கு மொபைல் ஆப்கள் மிகவும் வசதியாக உள்ளன.

டிஜிட்டல் வணிகத்தில் மொபைல் ஆப்களின் பங்கு

  • மொபைல் ஆப்கள், நுகர்வோர் நம்மை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கின்றன.

  • பெரும்பாலான நிறுவனங்கள் வழங்கும் சாட் (Chat) எனும் அம்சம், நுகர்வோர் நிறுவனத்தை தொடர்பு கொள்வதை மிகவும் எளிதாக்கிவிட்டது.

  • இதில் வாடிக்கையாளர் செய்ய வேண்டியது என்னவென்றால், தங்கள் வினாக்களை தட்டச்சு செய்து அனுப்புவது மட்டும்தான். நுகர்வோரின் கேள்விகளுக்கு நிறுவனங்கள் இந்த அம்சத்தின் மூலம்  உடனடியாக விடை அளிக்கின்றன. இந்த செயல், நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே அழுத்தமான தொடர்பை உருவாக்குகிறது.

இத்தகைய தனித்தன்மை வாய்ந்த செயல்களால் பிராண்ட், நுகர்வோரைப் பற்றிய அக்கறை கொண்டுள்ளது என்பதை, நுகர்வோருக்கு அழுத்தமாக புரிய  வைக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், நுகர்வோரின் புள்ளிவிவரங்களைப் பெற்று, அவர்களுக்கு ஏற்ற சலுகைகள், சந்தைப்படுத்துதலுக்கான மின்னஞ்சல் தகவல்கள், அவர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கான  வாழ்த்துக்கள் ஆகியவற்றை அனுப்பி, நிறுவனத்துக்கும் நுகர்வோருக்குமான பிணைப்பை வலுப்படுத்த முடிகிறது.

செயற்கை நுண்ணறிவு 

மனிதர்களைப் போல செயல்படக்கூடிய ஸ்மார்ட் மின்னணு சாதனங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய சாதனங்கள், உள்ளிடப்படும் கேள்விகளுக்கு ஏற்ற சரியான பதில்களை தரவல்லவையாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்த சிறப்பான தொழில் நுட்பங்கள், தனிப்பட்ட மனிதருக்கும் நிறுவனங்களுக்கும் பல வழிகளில் உதவக்கூடிய மொபைல் ஆப்களை உருவாக்கப் பயன்படுகின்றன.

பிராண்டுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே பிணைப்பை அதிகப்படுத்துதல்


புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கும், ஏற்கனவே உள்ளவர்களை தக்க வைப்பதற்கும், நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட வேண்டும். நமது தயாரிப்பு மற்றும் சேவையில் வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்கும், பிராண்டுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே உள்ள பிணைப்பை அதிகப்படுத்துவதற்கும், மொபைல் ஆப்கள் வழிவகுக்கின்றன. மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், பிராண்டுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான பிணைப்பு இன்னும் வலுப்படுகிறது. 

Read about பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன? 

பாதுகாப்பான வசதியான விரைவான கட்டண முறைகள்

பல காலங்களாக பரிவர்த்தனைகள் எல்லாம் ரொக்கங்களாக நடைபெற்று வந்தன. பிறகு கடன் அட்டைகள் எனப்படும் கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்ப காலத்தில் மக்கள் அவற்றைப் பயன்படுத்த அஞ்சினார்கள். ஆனால் தற்போது கிரெடிட் கார்டுகள் மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகி விட்டன. இன்றைய நாட்களில் யாரும் பெரிய பெரிய பெட்டிகளில் பணம் எடுத்து செல்வது கிடையாது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் அனைத்து பணபரிவர்த்தனைகளும் முடிந்துவிடுகின்றன. தற்போது அவற்றைவிட மொபைல் ஆப்கள் பரிவர்த்தனைகளை எளிதாக்கி விட்டன.


டெபிட் கார்டுகளையும், கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு பதிலாக, ஸ்மார்ட் போன்களின் மூலம் பணம் செலுத்துவது மக்களுக்கு எளிதாக உள்ளது. கார்டுகளை ஸ்வைப் செய்வதைவிட ஒரு இயந்திரத்தின் முன்னே ஸ்மார்ட்போனை அசைத்து பணம் செலுத்துவது வாடிக்கையாளருக்கு மிகவும் வசதியாக உள்ளது. வர்ச்சுவல் வேலட் எனப்படும் இந்த முறைகள் தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்து வருகின்றன. கால மாற்றத்திற்கு ஏற்றவாறு மக்களும் தங்களை வேகமாக மாற்றிக்கொண்டு வருகின்றனர். விர்ச்சுவல் வாலட் மற்றும் மொபைல் ஆப்களை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையை ஆரம்பகாலத்தில் ஒரு சில நிறுவனங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தன. தற்போது இந்த பயன்பாட்டு முறை எல்லா நிறுவனங்களிலும் உள்ளது. நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் மிகவும் வசதியான வகையில் மொபைல் ஆப் கட்டண முறைகள் உள்ளன.

சரியான வணிக முடிவுகளை எடுத்தல்

இன்றைய டிஜிட்டல் வணிக உலகில், 'ரியல் டைம் அனலிட்டிக்ஸ்' ௭னப்படும் 'நிகழ்நேர பகுப்பாய்வு' நமது வர்த்தகத்தில் சரியான முடிவை எடுக்க மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஒரு நபர் சராசரியாக ஒரு மாதத்திற்கு 40 மொபைல் ஆப்கள் வரை பயன்படுத்துகிறார். இதன் மூலம் ஏராளமான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களை சரியாகப் பயன்படுத்தினால், நிறுவனங்களும் வாடிக்கையாளரும் அதிக பயனைப் பெறுவர்.  உதாரணமாக ஒரு பலசரக்குக் கடையின் மொபைல் ஆப்பை, அதன் வாடிக்கையாளர் பயன்படுத்துகிறார் என்றால், ஒவ்வொரு முறையும் அவர் பொருள் வாங்கும்போது, தேர்ந்தெடுக்கும் பிராண்ட் மற்றும் வாங்கும் பொருட்களின் பட்டியல் ஒரே மாதிரி இருக்கும். இந்த தகவல்களை கொண்டு நாம் ரியல் டைம் அனாலிடிக்ஸ் முறையை சரியாகப் பயன்படுத்தினோம் என்றால், அடுத்தமுறை அந்த வாடிக்கையாளர் பொருள்களை வாங்கும் நேரத்தில், அவர் வாங்கும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளின் மீதுள்ள சலுகைகள், மற்றும் அவரின் விருப்ப பிராண்டு புதிதாக அறிமுகம் செய்த மற்ற பொருள்களின் தகவல்களை, அவருக்கு மொபைல் ஆப் வழியாக அனுப்ப முடியும்.  இத்தகைய முறைகளால் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் சலுகைகள் மற்றும் தகவல்களை பகிர முடியும். தேவையற்ற தகவல்கள் போய் சேருவதை தடுக்க முடியும். இதனால் நிறுவனங்களின் நேரமும் பணமும் மிச்சமாகும். மேலும் வாடிக்கையாளருக்கும், பிராண்டுக்கும் இடையே மாற்ற முடியாத பிணைப்பை உருவாக்க முடியும். வாடிக்கையாளரின் மீது பிராண்ட் கொண்டுள்ள அக்கறையை அவர்களுக்கு காட்ட முடியும்.  ஆகையால் மொபைல் ஆப்களை சரியான முறையில் பயன்படுத்துவது, வெற்றிகரமான வணிகத்திற்கு வழிவகுக்கும்.

வருங்கால வர்த்தக உலகில் மொபைல் ஆப்கள்

இளைய தலைமுறையில் 96 சதவீதத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன்களில் மூழ்கியுள்ளனர். மொபைல் ஆப்களை எல்லாவற்றுக்கும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தகவல்  தொடர்பு, பொருட்கள் வாங்குதல், செய்திகளை தெரிந்து கொள்ளுதல், பொழுதுபோக்கு என்று அனைத்துக்கும் மொபைல் ஆப்களை சார்ந்து உள்ளனர்.  பல நிறுவனங்கள், மொபைல் ஆப்களை ஆக்கபூர்வமான வழியில் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றன. மொபைல் ஆப்களை பயன்படுத்துவது, தற்போது வேண்டுமானால் புதிய முறையாகத் தெரியலாம். ஆனால் வருங்காலத்தில், அனைத்து துறைகளிலும் மொபைல் ஆப்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். ஸ்மார்ட் போன்கள் ௭வ்வாறு தற்போது மிகவும் அவசியமானவையாக ஆகிவிட்டனவோ, அதேபோல மொபைல் ஆப்களும், நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் அத்தியாவசிய தேவையாக மாறிவிடும். பயன்படுத்துவதில் உள்ள வசதியின் காரணமாக, மற்ற பயன்பாடுகளை விட, மொபைல் ஆப்களை நுகர்வோர் அதிகம் விரும்புகின்றனர் என்பதை, நிறுவனங்கள் உணர்ந்து இருக்கின்றன. எனவே தங்களுடைய நிறுவனத்தின் மொபைல் ஆப்களை மேம்படுத்துவதற்காக, அதிக அளவு முதலீடுகளை செய்கின்றன. மேம்பட்ட மொபைல் ஆப்களின் மூலம்,  வெற்றிகரமான வணிகத்தை மேற்கொள்ளலாம்.   தொழில்நுட்பம் ஒரு வணிகத்தை மற்ற இடையூறுகளிலிருந்து காக்கிறது. மொபைல் ஆப் போன்ற தனிப்பட்ட தொழில்நுட்பங்களின் ஆற்றல், வணிகத்துக்கான புதிய வாய்ப்புகளை திறக்கிறது. புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குகிறது. வணிகத்தை வெற்றிகரமாக்க மேற்கொள்ளும் நமது முயற்சிகளை, மேலும் லாபகரமாக மாற்றுகின்றன இந்த மொபைல் ஆப்கள். 

Related Articles 
2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் வணிகத்தில் நாம் தவறவிடக் கூடாதவை
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

49 views0 comments