ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங் (Storytelling Marketing)

Updated: Nov 18, 2020


ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங், எந்தவித விளக்கங்களும் தரப்படாமல், நமது பிராண்டைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ள மக்களுக்கு உதவுகிறது. இத்தகைய உண்மை கதைகளை எந்த வயதினராலும் புரிந்துகொள்ளமுடியும்.

 

சிறுவயதில் பெற்றோரிடமோ, தாத்தா பாட்டியிடமோ கதை கேட்காத குழந்தைகளே கிடையாது. கேட்கும் கதையின் கற்பனை உலகத்துக்குள் சென்றபடியே, அமைதியாக தூங்கும் குழந்தைகள், அடுத்த நாள் அந்த கதைகளை அச்சுப் பிசகாமல் சொல்வதைக் கேட்டு வியந்து இருப்போம். ஆம், நாம் கொடுக்க நினைக்கும் தகவல்களை கதைகளாக கூறும்போது, ஒருவர் மனதில் ஆழமாக பதிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. இதனாலேயே நம் முன்னோர்கள் மனித வாழ்விற்குத் தேவையான நல்ல கருத்துக்களை, கதைகளின் மூலம் கூறி சிறுவயதிலேயே நம் மனதில் ஆழமாக பதிய வைத்தார்கள். புராணங்கள், இதிகாசங்கள் போன்றவை எல்லாம் இவற்றின் வெளிப்பாடுகளே ஆகும். இவ்வாறு கதை சொல்லுதல் என்னும் அற்புதமான சக்தியை நாம் நம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங்கிற்கும் பயன்படுத்தலாம். Read about Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்


ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங் (Storytelling Marketing) என்றால் என்ன?


வாடிக்கையாளருக்கு நாம் கொடுக்கப் போகும் உண்மைத் தகவலை, கதையாக உருமாற்றி  சொல்வதே 'ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்' எனப்படுகிறது. இதன் மூலம் நமது பிராண்டுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பை (Emotional Bonding) ஏற்படுத்தி, பிராண்டைப் பற்றி தெளிவாக புரிய செய்து தயாரிப்புகளை வாங்க செய்ய முடியும். பிளாக் (Blogs) மற்றும் இணையதள பக்கங்களில் (Website Pages) வரும் அபௌட் செக்சன் (about section), அதாவது தங்களை பற்றிய கருத்துக்களை கூறும் பக்கம் ஆகியவற்றில், ஸ்டோரி டெல்லிங் முறையைப் பயன்படுத்த முடியும்.

ஸ்டோரி டெல்லிங்  முறை மார்க்கெட்டிங்கில் ௭ப்படி பயன்படுத்தப்படுகிறது?


ஸ்டோரி டெல்லிங் முறையை பல வழிகளில் மார்க்கெட்டிங்கிற்காக பயன்படுத்த முடியும். உதாரணமாக இரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.  ஒரு உணவகத்துக்கான மார்க்கெட்டிங்

முதலாவது எங்கள் உணவகத்தில் வீட்டில் செய்வது போலவே, ஆரோக்கியமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது "நாங்கள் முதல் முறையாக வேலை விஷயமாக இந்த ஊருக்கு வந்தோம். வெளியே உணவு சாப்பிடுவது எங்களுக்கு தயக்கமாக இருந்தது. வீட்டில் செய்யப்படும் உணவுகள் மிகுந்த ஆரோக்கியமானவையாக  இருக்கும். உணவகங்களில், அப்படிப்பட்ட ஆரோக்கியமான முறையில் செய்யப்பட்ட உணவு கிடைக்குமா என்று தேடிய பொழுது, தரமான உணவு இந்த உணவகத்தில் கிடைத்தது". இரண்டு முறைகளுமே நாம் சொல்ல வந்ததை சொல்லி விட்டன. ஆனால் இரண்டாவதாக சொல்லிய முறையே மிகுந்த ஈடுபாட்டோடு சொல்கிறது. இப்படித்தான் ஸ்டோரி டெல்லிங் முறை மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. உண்மை தகவலை தான் சொல்கிறோம் என்றாலும், மக்களுக்கு அந்த தகவலை, அவர்கள் வாழ்வோடு தொடர்புபடுத்தும் வகையில் சொல்வது, இன்னும் சுவாரசியம் ஊட்டுவதாகவும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.


Read about பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

ஸ்டோரி டெல்லிங் சக்திவாய்ந்த மார்க்கெட்டிங் முறையாக (Effective Marketing Tool) இருப்பது எப்படி?

ஆன்லைன் மார்க்கெட்டிங்கில், ஸ்டோரி டெல்லிங் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ஸ்டோரிடெல்லிங் மார்க்கெட்டிங் என்பதற்கு எந்த எல்லைகளும் (limits) கிடையாது. படங்களாகவும் (images), எழுத்து மூலமாகவும் (written), வாய்மொழியாகவும் (verbal) கூறமுடியும். சோசியல் மீடியா முதல், சாலையோர கட்டவுட் விளம்பரங்கள் வரை, எல்லாவற்றிலும் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும். இணைப்பை ஏற்படுத்துகிறது (Creates Connection)

மனிதனின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை கதைகள். ஆயிரக்கணக்கான வருடங்களாக, உலகமெங்கும் எல்லா தரப்பு மக்களாலும்,  தகவல்களை ஒருவரிடம் கொண்டு சேர்க்க கதைகளே பயன்படுத்தப்பட்டன. புத்தகங்கள், திரைப்படங்கள், நாடகங்கள் என்று அனைத்திலுமே கதைகள் சொல்லப்பட்டன. போர்கள் மற்றும் அனைத்து வரலாற்றுச் செய்திகளையும் கதைகள் மூலமாகவே நாம் அறிந்து கொண்டோம். கதைகள் நம் சிந்தனையையும் செயல்களையும் மாற்றும் சக்தி படைத்தவை.  ஆகையால்தான் ஸ்டோரி டெல்லிங், நாம் சொல்ல வரும் கருத்துக்களை நமது வாழ்வோடு இணைத்து, எளிதாக புரிய செய்கிறது. இதுமட்டுமல்லாமல் ஸ்டோரி டெல்லிங் ஒரு ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நெருக்கம்(Intimacy), இணைப்பு (Connection) மற்றும் புரிதலை (Understanding) உண்டாக்குகிறது. நமது பிராண்டை பற்றி வாடிக்கையாளர்கள் நன்கு அறிந்துகொள்ளச் செய்கிறது. மார்க்கெட்டிங்கைவிட இது மேலானது. தாக்கத்தை உண்டாக்குகிறது (Creates Impact)


ஸ்டோரி டெல்லிங் வாடிக்கையாளருக்கு உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டோரி டெல்லிங் மூலம் நகைச்சுவை, ஏக்கம், சோகம், கோபம் போன்ற பலவற்றை மக்களால் உணர முடியும். நல்ல ஸ்டோரி டெல்லிங் மூலம் மக்களிடம் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டால், அவர்களை உடனடியாக செயல்பட செய்ய முடியும். ஆகையால் நமது ஆன்லைன் கன்டெண்டில், சிறந்த கதையை நம்மால் சொல்ல முடிந்தால், அதன் மூலம் மக்களை எளிதாக நமது தயாரிப்புகளை வாங்க செய்ய முடியும்.

சிறந்த ஸ்டோரி டெல்லிங்கிற்கு அடிப்படையான விஷயங்கள் எவை?

கதை சொல்வது என்பது நம் அனைவருக்குமே கைவந்த கலையாகும். ஆனால், அதை மார்க்கெட்டிங்குக்கு பயன்படுத்தும்போது, என்னவெல்லாம் முக்கியமாக இடம் பெற வேண்டும் என்பதை பார்ப்போம். முக்கிய கதாபாத்திரம் (Main Character)

நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கதைக்கும், ஒரு முக்கிய கதாபாத்திரம் கட்டாயம் இருக்க வேண்டும். அது நாமாகவோ, வேறு ஒருவரோ அல்லது நம்மால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரமாகவோ இருக்கலாம். இத்தகைய கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்க்க உதவுகிறது. தடைகளைத் தகர்த்தெறியும் அனுபவம் (Overcome the Obstacles)


நாம் ஏற்படுத்தும் அனைத்து கதைகளிலும் உள்ள முக்கிய கதாபாத்திரம், தன் வாழ்க்கையில் ஏதேனுமொரு தடையை தாண்டி வந்த அனுபவம் இருக்க வேண்டும். அந்த அனுபவத்தின் வாயிலாக, நாம் நமது பிராண்டை பற்றி மக்களுக்கு தரவேண்டிய தகவல்களை அளிக்க வேண்டும். தீர்மானமான முடிவு (Ending)


எல்லா கதைக்குமே சரியான முடிவு இருக்க வேண்டும். அந்த முடிவு நமது பிராண்டை பற்றிய அழுத்தமான, நேர்மறையான எண்ணத்தை வாடிக்கையாளர் மனதில் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.      இவை மூன்றும் ஒவ்வொரு கதைக்கும் அடிப்படையான விஷயங்கள். நாம் உருவாக்கும் கதையில், இவை மூன்றும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கதை உருவாக்கத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

நாம் உருவாக்கும் கதையில், அடிப்படையான விஷயங்கள் இருந்தாலும், மேலும் சில முக்கியமான அம்சங்கள் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எளிதாக மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஈடுபாடு கொள்ளச் செய்வதாக இருத்தல்

நாம் உருவாக்கும் கதை, அதைப் படிக்கும் வாடிக்கையாளர் ஈடுபாட்டுடன் தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கதையின் முடிவு எவ்வாறு இருக்கும் என்று, அவர்களால் கணிக்க முடிந்தால் மட்டுமே, தொடர்ந்து கதைக்குள் பயணம் செல்வார்கள்.

உணர்வுகளோடு தொடர்புடையதாக இருத்தல்

அனைவரும் அறிந்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகள் அடங்கியதாக நாம் உருவாக்கும் கதை இருக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் அதை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு கதைக்குள் ஒன்றிப் போவார்கள். 

எளிதாக பின்தொடரக் கூடியதாக இருத்தல்

நாம் உருவாக்கும் கதை சீராக செல்லக்கூடியதாக இருக்கவேண்டும். உலகத்திலேயே சிறந்த கதையை உண்டாக்கினாலும், படிப்பவர்களால் பின் தொடர முடியாத குழப்பங்கள் கதைகள் இருந்தால் அது பயனற்றது ஆகும். 

நினைவில் கொள்ளக்கூடியதாக இருத்தல்

நாம் உருவாக்கும் கதைகள் மக்கள் மனதோடு ஒட்டிக் கொள்ளக் கூடியவையாக இருக்க வேண்டும். அதன் மூலம் நமது பிராண்டும் ஆழமாக அவர்கள் மனதில் பதியும்.

விவரங்களை கொடுத்தல்

நாம் உருவாக்கும் கதைகளில் கூறப்படும் தகவல்கள், நன்கு ஆராய்ந்து பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். ஆராய்ந்து பெறப்பட்ட உண்மைகளை, நமது கதைகளில் கொடுக்கும்போது மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்

காட்சிகளோடு கதை சொல்லுதல்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் பெரிய நன்மைகளில் ஒன்று, நாம் கூற நினைப்பதை காட்சிகளாக கொடுக்க முடியும் என்பதே. ஸ்க்ரீன் ஷாட்டுகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் கிராபிக்ஸ் மூலமாக கதைகள் கூறப்படும்போது மிக வேகமாக கவனத்தை ஈர்க்கின்றது.

ஸ்டோரி டெல்லிங்கின் முக்கியமான உத்திகள் (Strategies) எவை?

வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுதல் யாருக்காக கதையை உருவாக்க போகிறீர்கள் என்ற தெளிவு இல்லாமல், வெற்றிகரமான கதையை உருவாக்க இயலாது. நமது வாடிக்கையாளர்கள் யார், அவர்களுக்கான தேவைகள் என்ன, என்பது போன்ற விவரங்களை அறிந்த பின்பே, கதைகளை உருவாக்க ஆரம்பித்தல் வேண்டும். அப்போதுதான் சரியான கதையை சரியான வழியில் சொல்ல இயலும். சொல்லப்போவதை தெளிவாக தீர்மானித்தல் நமது நிறுவனத்தின் மதிப்பு, தயாரிப்புகளின் தன்மை, அவற்றால் வாடிக்கையாளர் பெறும் பயன்கள் மற்றும் வாடிக்கையாளர் வாங்குவதை ஊக்குவித்தல் போன்றவைகள் அனைத்தையும், தெளிவாக மனதில் கொண்டே கதையை உருவாக்க ஆரம்பிக்கவேண்டும். செயலில் இறங்க தூண்டுதல் கதை முடிந்த பிறகு, அதை படித்த வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதற்கான தூண்டுதல் கதையில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கதையை உருவாக்க வேண்டும். கதையை வழங்கும் முறை சிறந்த கதையை உருவாக்கிவிட்டால் போதும் என்பது, நாம் எதிர்பார்க்கும் வெற்றியை தராது. அந்த கதையை எந்த வகையில் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம் என்பதில் தான் அதிக பங்கு உள்ளது. படங்கள், வீடியோக்கள், கிராபிக்ஸ் டிசைன்கள் போன்றவற்றைக் கொண்டு, எளிதாக கவரும்படி கதையை உருவாக்கி வழங்க வேண்டும்.

வெற்றிகரமான ஸ்டோரி டெல்லிங்கிற்கு சில உதாரணங்கள்

உலகில் உள்ள பல வெற்றிகரமான பிராண்டுகள், ஸ்டோரி டெல்லிங்கின் சக்தியை உணர்ந்துள்ளன. அவற்றுள் சிறப்பாக ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்கை பயன்படுத்திய சில உதாரணங்களை பார்ப்போம். டிஸ்னிலேண்ட் பாரிஸ் (Disneyland Paris)


கதைகள் சொல்வதில் டிஸ்னிலேண்ட் நிறுவனத்திற்கு நிகர் அதுவேதான். அவர்களது விளம்பரத்தில் கூறப்படும் கதையில், அந்த பிராண்டின் தனித்தன்மைகள் பளிச்சிடுகின்றன. ஒரு சிறிய வாத்து குஞ்சிற்கு (Duckling) டொனால்ட் டக் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியோடு அதிலுள்ள டொனால்ட் டக் (Donald Duck) உருவத்துடன் நேசம் கொள்கிறது. பருவ மழையின் காரணமாக, அந்த வாத்துக்குஞ்சு குடும்பத்துடன் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை வருகிறது. டொனால்ட் டக் காமிக்ஸ் புத்தகம் மழையில் சேதம் அடைந்து விடுகிறது. சோகத்துடன் வாத்து குஞ்சு குடும்பத்தினரோடு இடம் பெயர்கிறது. இறுதியில் அவர்கள் வந்து அடையும் இடம் டிஸ்னிலேண்ட் பாரிஸ். வாத்துக்குஞ்சு காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்து மகிழ்ந்த டொனால்டு டக், நிஜத்தில் டிஸ்னிலேண்டில் நின்றுகொண்டு, வாத்துக்குஞ்சை வரவேற்கிறது. வாத்துக்குஞ்சு எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறது. இந்த கதையில், நாம் நம்மை அறியாமலேயே வாத்துக்குஞ்சுடன் சேர்ந்து டிஸ்னிலேண்டுக்கு பயணிக்கிறோம்.  இதைப்போலவே, கின்னஸ் நிறுவனம் உருவாக்கிய ஜப்பான் நாட்டு பெண்கள் ரப்பி விளையாட்டு குழுவின் கதையும்  மக்களின் உணர்வுகளோடு ஒன்றக் கூடியது.

கொக்க கோலா நிறுவனம் அனிமேஷன் மூலம், பன்னிரெண்டு சிறு சிறு கதைகளை உருவாக்கினார்கள். வாடிக்கையாளர்கள் கோக் குளிர்பானத்தின் டின்னின் மீது, தங்களுடைய மொபைலை வைத்து ஸ்கேன் செய்யும்போது, இந்த 12 கதைகளில் ஏதாவது ஒன்றை அனிமேஷன் வடிவில் காண முடியும். இவை எல்லாமே சிறந்த ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்கிற்கு உதாரணங்கள். இன்றைய காலத்தில் தொழில்நுட்பங்கள் பல வளர்ச்சிகளை பெற்றிருந்தாலும், ஒரு எளிய கதை அவற்றைவிட சக்திவாய்ந்தது. வலுவான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிகரமான வழியில் சொல்லப்படும் கதைகள், எளிதில் மனிதர்களை ஈர்க்கின்றன. ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங், எந்தவித விளக்கங்களும் தரப்படாமல், நமது பிராண்டைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ள மக்களுக்கு உதவுகிறது. இத்தகைய உண்மை கதைகளை எந்த வயதினராலும் புரிந்துகொள்ளமுடியும். ஆகவே, ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங் முறையை சிறப்பாக பயன்படுத்தினால், நமது பிராண்டை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.Related Articles 
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

66 views0 comments