சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் வெற்றி பெற வழிகள்


சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் (Social Media Marketing) எனும், சமூக ஊடக சந்தைப்படுத்துதல் மூலம் நமது பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், வலைத்தளத்திற்கு அதிக பார்வையாளர்களை கொண்டு வரவும், வரும் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றவும், கையாளவேண்டிய வழிகளை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

 

சோசியல் மீடியா மார்க்கெட்டிங் (சமூக ஊடக சந்தைப்படுத்துதல்) என்றால் என்ன?

முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களின் வழியாக, ஒரு வணிகம் (Business) மற்றும் அதன் தயாரிப்புகளை (Products) பற்றிய உள்ளடக்கங்களை (Content) உருவாக்கி, அதன் வழியே விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான செயலே 'சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் (Social Media Marketing)' எனப்படுகிறது. சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் வழியாக நமது இலக்குக்கான பார்வையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் அவர்களின் இடத்திலேயே சந்திக்கவும், அவர்கள் ஒருவருக்கொருவரோடும் மற்றும் நமது பிராண்டோடும் தொடர்பு கொள்ளவும் முடியும். எனவே, இந்த மார்க்கெட்டிங் முறை மிகவும் மதிப்பு மிக்கது மற்றும் நமது வணிகத்தின் வளர்ச்சிக்கும் பயனளிக்கக் கூடியது. நமது இலக்குக்கான பார்வையாளர்கள், எத்தகைய தளங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை பொருத்து, நமது சந்தைப்படுத்துதல் உத்தி இருக்க வேண்டும் என்பது இதில் முக்கியமானது.


Read about 2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் வணிகத்தில் நாம் தவறவிடக் கூடாதவை

சோசியல் மீடியா மார்க்கெட்டிங்கிற்கான தளங்கள் - ஒரு பார்வை

இன்றைய காலகட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்களை பகிர்வது, கருத்துக்களை பகிர்வது, பொருட்கள், சேவைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றின் விமர்சனங்களை பகிர்வது, போன்றவை இவற்றின் முக்கிய அம்சங்களாக திகழ்கின்றன. இத்தகைய தளங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

முகநூல் எனும் ஃபேஸ்புக் (Facebook)

உலகம் முழுவதும் ஒரு நாளில் 1.73 பில்லியன் மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இது B2C வணிகத்திற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது. வணிக விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பேஸ்புக் மிகவும் உதவிகரமானது.


ட்விட்டர் (Twitter) ட்விட்டர் தளத்தை உலக அளவில் தினசரி 126 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். B2B மற்றும் B2C வணிகத்திற்கு ட்விட்டர் சிறந்த தளம். மக்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ட்விட்டர் ஏற்ற தளமாக விளங்குகிறது.

இன்ஸ்டாகிராம் (Instagram) ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் பயனாளர்களை கொண்ட இன்ஸ்டாகிராம், B2C வணிகத்திற்கு ஏற்றது. விளம்பரங்கள் செய்வதற்கு பொருத்தமான தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது.லின்கிட் இன் (LinkedIn) ஒரு மாதத்தில் 675 மில்லியன் பயனாளிகள் இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர். B2B வர்த்தகத் தொடர்புகள், வணிகத்தை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு தொடர்பான சந்தைப்படுத்துதல் ஆகியவை, இந்தத் தளத்தில் முக்கியமானவையாக மேற்கொள்ளப்படுகின்றன.

யூடியூப் (YouTube)

ஒரு மாதத்தில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். B2C வணிகத்துக்கு சிறந்த தளமாகும். பிராண்ட் விழிப்புணர்வு, பொழுதுபோக்கு மற்றும் செயல்முறை தொடர்பான வீடியோக்கள் பெரும்பான்மையாக இடம்பெறுகின்றன.


சிநாப் சாட் (Snap Chat) உலக மக்கள் தொகையில் 229 மில்லியன் மக்கள் தினமும் இந்த தளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். விளம்பரம் மற்றும் பிராண்ட் விழிப்புணர்வுக்கான இந்த தளத்தில் B2C வணிகத்துக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


பின்ட்ரஸ்ட் (Pinterest) ஒரு மாதத்தில் 367 மில்லியன் மக்கள் பயன்படுத்தும், B2C வணிகத்திற்கான இந்த தளத்தில், காட்சி விளம்பரங்கள் (Display ads) அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக ஊடக சந்தைப்படுத்துதலின் (Social Media Marketing) பயன்கள்

நமது நிறுவனம், சமூக ஊடக சந்தைப்படுத்துதலை மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை இங்கே பார்ப்போம்.

பிராண்டை பற்றிய விழிப்புணர்வு (Brand Awareness) அதிகரித்தல்

உலகம் முழுவதிலுமாக 3.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சமூக ஊடக தளங்களின் வழியாக நமது பிராண்ட் மற்றும் தயாரிப்புகளைப் பற்றிய விவரங்கள் பகிரப்படும் போது, அவை உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை சென்று சேர்கின்றன. இதனால் நமது பிராண்ட் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. பார்வையாளர்கள் மேற்கொள்ளும் விருப்பங்கள் (Likes), பகிர்வுகள் (Shares), மற்றும் மறு இடுகைகள் (Repost) போன்ற செயல்களால் நமது விபரங்கள் மென்மேலும் பலரை சென்று அடைகின்றன. சமூக வலைத்தளங்களில் நாம் கொடுக்கும் தகவல்களிலுள்ள இணைப்பை (Link), நமது நேரடி வலைதளத்திற்கு செல்லுமாறு அமைக்க வேண்டியது அவசியமானது.


Read about ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்

விற்பனையை அதிகரித்தல் (Increase Sales)

நமது பிராண்ட் மற்றும் தயாரிப்புகளை சமூக ஊடகங்களின் வழியாக விளம்பரப்படுத்துவது மற்றும் பகிர்வது விற்பனையை அதிகரிக்க மேற்கொள்ளும் எளிய வழியாகும். கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், சமூக ஊடகங்களின் வழியே பார்வையாளர்களை அதிகரிக்கவும், பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றவும் முடியும். கீழ்க்கண்ட வழிகளின் மூலம் சமூக ஊடக சந்தைப்படுத்துதலில் விற்பனையை அதிகரிக்கலாம்

1. நமது பார்வையாளர்கள் (viewers) மற்றும் பின்தொடர்பவர்களை (followers) ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு போட்டிகள் (Contests) உருவாக்கலாம்.


2. சமூக ஊடகங்களில் நமது வலைத்தளத்துக்கான இணைப்புகளை (links) வழங்கும்போது அவற்றோடு சலுகைகளையும் (offers) வழங்குதல்.

3. நேரடி வீடியோக்கள் வழியாக நமது தயாரிப்புகளைப் பற்றிய தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுதல்.

4. சமூக ஊடக தளங்களில் இருக்கும் நமது ப்ரோபைல் (profile) மூலம், நம்முடைய தயாரிப்புகளை விற்பனை செய்தல். எடுத்துக்காட்டாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உள்ள ஷாப்பிங் அம்சங்களை இயக்கத்தில் (Activate) கொண்டு வரலாம். இத்தகைய அம்சங்கள் நம்முடைய பார்வையாளர்கள், பின்தொடர்பவர்களுக்கு நம்முடைய தயாரிப்புகள் மற்றும் அவற்றின் விலை, அளவு போன்றவற்றை தெரிந்துகொள்ள, இடுகைகளில் கிளிக் செய்து நேரடியாக நம்முடைய வலைத்தளத்திற்கு சென்று தயாரிப்புகளை வாங்க இயலும். வாடிக்கையாளருடன் நல்லுறவு (Customer Relationship)

சமூக ஊடகங்களில் தொடர்ந்து நமது இருப்பை காட்டுவதன் மூலம், நமது பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடனான நமது மற்றும் நமது வணிகத்துடன் நல்லுறவைப் பேண முடியும். தொடர்ந்து இடுகைகள் இடுதல், அவர்களின் கருத்துக்கள் மற்றும் கேள்விகளுக்கு உடனடி விடை அளித்தல், நமது தயாரிப்புகளை பற்றி உதவி தேவைப்படின் உடனடியாக செய்தல், போன்றவற்றின் வழியாக வாடிக்கையாளர்கள் உடன் இணக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும் நம்மைப் பின் தொடரும் பார்வையாளர்களிடம், நமது தயாரிப்புகளைப் பற்றிய கருத்துக்கள், கேள்விகள், நமது தயாரிப்புகளில் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள், தயாரிப்புகளை மேம்படுத்திக்கொள்ள வழிகள், போன்றவற்றைக் கேட்டுப் பெறுவதன் மூலம், அவர்களின் நன்மதிப்பைப் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு நாம் அளிக்கும் மதிப்பை அவர்களிடம் உணர்த்த முடியும். போட்டியாளர்களிடமிருந்து கற்றறிதல் (Learn from competitors)

நமது போட்டியாளர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள, சமூக ஊடகங்கள் சிறந்த வழியாகும். சமூக ஊடகங்களில் அவர்களது தயாரிப்புகள், அவர்கள் விளம்பரப்படுத்தும் விதங்கள், கையாளும் உத்திகள், செய்யும் பிரச்சாரங்கள், சந்தைப்படுத்தும் வழிகள், அவர்களை பின்தொடர்பவர்கள், போன்ற அனைத்து தகவல்களையும் பெற முடியும். மேலும் சமூக ஊடக தளங்களில், போட்டியாளர் உடனான நமது அணுகுமுறையில், ௭வையெல்லாம் வேலை செய்யும், ௭வையெல்லாம் வேலை செய்யவில்லை என்பதை அறிய உதவுகின்றன. நமது அணுகுமுறையில் எவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் மற்றும் எவற்றையெல்லாம் மாற்ற கூடாது என்பதையும் தீர்மானிக்க உதவுகின்றன.

சமூக ஊடக சந்தைப்படுத்தலின் உத்திகள் (Social Media Marketing Strategies)

சமூக ஊடக சந்தைப்படுத்துதல் நமது வணிகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த, ஐந்து உத்திகளைக் கையாளலாம். அவை,

1. நமது பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிதல். 2. நாம் சந்தைப்படுத்துவதற்கான சரியான சமூக தளத்தை தேர்ந்தெடுத்தல். 3. தனித்துவமான மற்றும் கவரக்கூடிய உள்ளடக்கங்களை (Contents) உருவாக்குதல். 4. சரியான நேரத்தில் இடுகைகளை (Posts) இடுதல். 5. சமூக தளங்களில் நமது தாக்கம் மற்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் முடிவை அவ்வப்போது ஆராய்தல். மேற்கண்ட ஐந்து உத்திகளையும் விரிவாக பார்ப்போம் 1. நமது பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிதல்

சமூக ஊடக சந்தைப்படுத்துதலில், எந்தவொரு அணுகுமுறையையும் மேற்கொள்வதற்கு முன்பாக, நமது பார்வையாளர்கள் மற்றும் நமது தயாரிப்புகளை வாங்குபவர்கள் யார் என்பதை, நாம் முதலில் தீர்மானித்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு என்ன தேவை என்பதை, நம்மால் முடிவு செய்ய முடியும். உதாரணத்திற்கு, நமது நிறுவனம் உடற்பயிற்சி சம்பந்தமான ஆடைகளை சந்தை படுத்துகிறது என்றால், நம்முடைய இலக்கு காண பார்வையாளர்கள், உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டோர் மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆவார்கள். நம்முடைய தயாரிப்புகளை வாங்குபவர் களையும், பார்வையாளர்களையும் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களை ஈர்க்கக்கூடிய உள்ளடக்கம் மற்றும் இடுகைகளை நாம் எளிதாக உருவாக்க முடியும். இதனால் அவர்களை எப்போதும் நம்முடைய தயாரிப்புகளில் ஆர்வமாக இருக்க வைக்க முடியும். 2. நாம் சந்தைப்படுத்துவதற்கான சரியான சமூக தளத்தை தேர்ந்தெடுத்தல்

சமூக ஊடக சந்தைப்படுத்துதலில் நமது தகவல்களையும், உள்ளடக்கங்களையும் எந்த தளத்தில் பகிர போகிறோம் என்பதில், கவனமாக இருத்தல் வேண்டும். நமது இலக்குக்கான பார்வையாளர்கள் எந்த தளத்தில் அதிக அளவில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை தீர்மானித்து, அதில் நம்முடைய உள்ளடக்கங்களை பகிர்தல் வேண்டும். இலக்குக்கான சாத்தியமான பார்வையாளர்கள் இன்று எந்த தளத்தில் இருக்கிறார்கள், நாளை எந்த தளத்தில் இருப்பார்கள், என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். எடுத்துக்காட்டாக விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள், நமது இலக்குக்கான பார்வையாளர்கள் என்றால், நாம் இன்ஸ்டாகிராமை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், இன்ஸ்டாகிராமில் விளையாட்டு துறையினைச் சார்ந்த பயனர்கள் அதிகம் உள்ளனர். 3. தனித்துவமான மற்றும் கவரக்கூடிய உள்ளடக்கங்களை (Contents) உருவாக்குதல்

உலகம் எங்கும் பில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் நிலையில், நமது பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள், நம்முடைய போட்டியாளர்களின் இடுகைகள் மற்றும் உள்ளடக்கங்களையும் பார்த்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகையால் நம்முடைய போட்டியாளர்களையும் தாண்டி, பார்வையாளர்களைக் கவரும் வகையில், நம்முடைய உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும். நமது உள்ளடக்கத்தைப் படித்த உடனேயே, இணைப்புக்கான பொத்தானை அவர்கள் கிளிக் செய்யக்கூடிய அளவுக்கு, தரமான ஈர்க்கக்கூடிய உள்ளடக்கங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் சமூக ஊடகங்களுக்கான பிரத்தியேகமான உள்ளடக்கங்களை தயார் செய்ய வேண்டும். மேலும், நமது போட்டியாளர்களின் உள்ளடக்கங்களை கூர்ந்து கவனித்தால், நமக்கான தனித்துவமான உள்ளடக்கங்களை நாம் எளிதில் தயார் செய்ய முடியும். நாம் பயன்படுத்தும் சமூக தளத்தில் உள்ள அம்சங்களையும், அவ்வபோது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பேஸ்புக்கில் உள்ள நேரடி வீடியோக்களுக்கான அம்சங்களை, நமது பதிவுகள் பற்றிய தகவல்களை வெளியிட பயன்படுத்திக் கொள்ளலாம். நமது தயாரிப்புகளுடனான, வாடிக்கையாளர்களின் பிரத்தியேக அனுபவங்களையும், நமது தயாரிப்புகள் பற்றிய அவர்களின் நல்ல கருத்துக்களையும், அவர்களின் புகைப்படங்களோடு வெளியிடுவதன் மூலமும், சிறந்த உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.


Read about டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்

4. சரியான நேரத்தில் இடுகைகளை (Posts) இடுதல்

திட்டமிட்டபடி நமது உள்ளடக்கங்களை பகிர்ந்துகொள்ள, சமூகத்தளங்களில் உள்ள மேலாண்மை அம்சங்களை பயன்படுத்த வேண்டும். அவற்றின் மூலம் நம்முடைய இடுகைகளை எப்போது பகிர வேண்டும் என்பதை, முன்கூட்டியே தீர்மானித்து விட முடியும். நாம் குறித்து வைத்த அந்த நேரத்தில் தாமாகவே, நமது இடுகைகள் மற்றும் உள்ளடக்கங்கள் பகிரப்படும். இதனால் நமது நேரத்தை மிச்சப்படுத்த முடியும். மற்றும் பிற பணிகளில் கவனம் செலுத்த முடியும். சமூக வலைத்தள பக்கங்களில் நமது இடுகைகளை எவ்வளவு கால இடைவெளியில் பகிர வேண்டும் என்ற சந்தேகங்கள் நமக்கு இருக்கலாம். தரமான உள்ளடக்கங்களை மட்டுமே பகிர வேண்டும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டியது மிக அவசியம். மிக நீண்ட கால இடைவெளியில் நாம் இடுகைகளை பகிரும்போது, நமது பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களால் மறக்க படுவோம். அதே நேரத்தில், கால இடைவெளி மிகவும் குறைவாக, அடிக்கடி இடுகைகள் பகிரப்படும் போது, பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை இழக்க நேரிடலாம் அல்லது அவர்கள் நமது வலைதளத்திற்கு வந்து செல்லும் போக்குவரத்து குறையலாம். 5. சமூக தளங்களில் நமது தாக்கம் மற்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் முடிவை அவ்வப்போது ஆராய்தல்

இலக்குகளை வெற்றிகரமாக அடைய, சமூகத்தளங்களில் நமது ஒவ்வொரு இடுகைகளையும் கண்காணித்து மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். சமூக ஊடக அளவீடுகளை (Social Media Metrics) நிர்வகிப்பதன் மூலம் இதனை செய்யலாம். சமூக ஊடக அளவீடுகள் (Social Media Metrics) சமூக ஊடகங்களில் நாம் இடும் இடுகைகள், நமது பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் இடையே, எத்தகைய தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன என்பதை காட்டும் தரவுகள் (Data's) சமூக ஊடக அளவீடுகள் எனப்படுகின்றன. இந்த அளவீடுகளில் நமது இடுகைகள் பெற்றுள்ள விருப்பங்கள் (Likes), பின்தொடர்புகள் (Follows), பகிர்வுகள் (Shares), போன்ற பல தகவல்கள் தரவுகளாக இருக்கும். இவற்றுள் முக்கியமான அளவீடுகளை இங்கு காணலாம்.

ஈடுபாடு (Engagement)

சமூக ஊடக தளங்களில் நாம் இடும் இடுகைகளுக்கு கிடைக்கும் விருப்பங்கள், பகிர்வுகள், கருத்துக்கள், கேள்விகள், பதில்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை மட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராமில் சேமிக்கப்பட்ட இடுகைகள் மற்றும் பின்ட்ரஸ்டில் பின் செய்யப்பட்ட இடுகைகளும் இவற்றில் அடங்கும். தாக்கம் (Reach)

சமூக தள பக்கங்களில், நம்முடைய இடுகைகள் மற்றும் உள்ளடக்கங்களை பார்த்த நபர்களின் எண்ணிக்கை வரம்பு. பின்தொடர்பவர்கள் (Followers)

சமூக வலைத்தள பக்கங்களில் நமது (ப்ரொஃபைல் - profile) சுயவிவரத்தில் உள்ள, பின்தொடரும் (Follow) அம்சத்தை கிளிக் செய்து, நாம் இடும் இடுகைகள் மற்றும் உள்ளடக்கத்தை தவறாமல் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை. பதிவுகள் (Impression)

நமது சமூக வலைத்தள பக்கங்களில், நாம் இடும் இடுகைகள் எத்தனை முறை பார்க்கப்பட்டு உள்ளன என்பதன் எண்ணிக்கை இதுவாகும். பார்வையாளர் கிளிக் செய்தாலும், செய்யாவிட்டாலும், இடுகைகள் அமைந்துள்ள பக்கத்தை ஸ்கிரால் (Scroll) செய்தாலே பதிவு செய்யப்படும். வீடியோ பார்வைகள் (Vedio Views)

ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நாம் பதிவேற்றம் செய்த வீடியோக்களுக்கு கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கை. பார்வையாளர் வருகை (Profile visit)

நமது சமூகவலைதள பக்கத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் ப்ரொஃபைலை (Profile) பார்த்தவர்களின் எண்ணிக்கை. டேக் (Tag)

நமது பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள், நமது சமூக வலைத்தள பக்கத்தின் பெயரையோ, ஹேஷ்டேகையோ, அவர்கள் இடும் இடுகையில் சேர்ப்பது டேக் எனப்படுகிறது. மீள்இடுகை (Repost)

நமது பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் நமது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை, அவர்களின் வலைத்தள பக்கத்தில் மீண்டும் இடுவது மீள்இடுகை (Repost) எனப்படுகிறது. பகிர்வுகள் (Shares)

நமது சமூக வலைத்தள பக்கத்தில் இடம்பெற்றுள்ள இடுகைகள் மற்றும் உள்ளடக்கங்களை, நமது பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள், அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்வது. நாம் மேற்கண்ட அளவீடுகள் அனைத்தையும் பயன்படுத்தி, நமது சமூக வலைத்தள பக்கங்களில், பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யலாம். நம்மை பின்தொடர்பவர்களுடன் தொடர்பில் இருப்பது, நமது ஹேஷ்டேக்குகளை அவர்களை பயன்படுத்த சொல்வது, அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது, அவர்களின் பதிவுகளை விரும்புவது, நம்மைப் பற்றிய பார்வையாளர்களின் கருத்துக்களை மீண்டும் இடுகை இடுவது, போன்ற செயல்களின் மூலம், பார்வையாளர்கள் தொடர்ந்து நமது வலைதள பக்கங்களில் இருக்குமாறு செய்யலாம். மேலும் இந்த சமூக ஊடக அளவீடுகளை பல்வேறு வகைகளில் நம்மால் மதிப்பாய்வு (Review) செய்யும் முடியும். இதற்காக சமூக வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு கருவிகளை (Analytics Tools) நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ட்விட்டர் அனலிடிக்ஸ் (Twitter Analytics), ஃபேஸ்புக் அனலிட்டிக்ஸ் (Facebook Analytics), இன்ஸ்டாகிராம் இன்சைட்ஸ் (Instagram Insights), கூகிள் அனலிடிக்ஸ் (Google Analytics) போன்ற பகுப்பாய்வு கருவிகள், நமது வலைத்தளத்தையும் (Website) சமூகவலைதள பக்கத்தையும் (Social Media Page) மதிப்பீடு செய்வதற்கு உதவுகின்றன இன்றைய காலகட்டத்தில், சமூகவலைதளங்களில் உலகமெங்கும் பில்லியன் கணக்கான மக்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, வணிக நிறுவனங்கள் பொருட்களை சந்தைப் படுத்தவும், விளம்பரப்படுத்தவும், வாடிக்கையாளருடன் தொடர்பில் இருக்கவும் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துகிறார்கள். ஆகையால், நமது நிறுவனத்தின் சமூக ஊடக நடவடிக்கைகளை தீர்மானித்தல், சமூக ஊடக சந்தைப்படுத்தலின் போக்குகளைப் புரிந்து கொள்ளுதல், போன்றவை அவசியமானவை. எனவே நமது சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், ஈடுபாட்டை மேம்படுத்தவும், மாற்றங்களை கொண்டு வரவும், சமூக ஊடக சந்தைப்படுத்துதல் உத்திகளை திட்டமிட்டு செயல்படுத்துதல் வேண்டும்.

 
Related Articles 
2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் வணிகத்தில் நாம் தவறவிடக் கூடாதவை
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் மார்க்கெட்டிங்
பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?
86 views0 comments