பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

Updated: Nov 19, 2020

ஒரு நல்ல பிராண்ட் என்பது சாதாரணமாக உருவாகி விடாது. அது மிக ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். பல விதங்களில் நமது பிராண்ட் நமது தொழிலுக்கும், நிறுவனத்துக்கும் முக்கியமானதாக இருக்கிறது.

 

ரு நிறுவனத்தை பற்றியும், அதன் தயாரிப்பு, தயாரிப்பின் தரம், வாடிக்கையாளர் சேவையை பற்றியும், மக்களுக்கு நாம் கொடுக்கும் வாக்குறுதி (Promise) மற்றும் நம் நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை (Trust) தான் பிராண்ட். கவர்ச்சியான லோகோ, பெரிய அளவில் செலவு செய்து எடுக்கப்பட்ட விளம்பரங்கள், இவற்றையெல்லாம் வைத்து ஒரு சிறந்த பிராண்டை அடையாளப்படுத்த முடியாது. உண்மையிலேயே சிறந்த பிராண்ட் என்பது, மக்களை உணர்வு பூர்வமாக அணுகக் கூடியது. மக்களிடையே நாம் ஏற்படுத்தும் நம்பிக்கையின் அடையாளமே நமது பிராண்ட். 

பிராண்டிங்கின் முக்கியத்துவம்

நமது வாடிக்கையாளர்களிடையே நமது பிராண்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். ஒரு நல்ல பிராண்ட் என்பது சாதாரணமாக உருவாகி விடாது. அது மிக ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். பல விதங்களில் நமது பிராண்ட் நமது தொழிலுக்கும், நிறுவனத்துக்கும் முக்கியமானதாக இருக்கிறது.


Read about டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்


அங்கீகாரத்தை அளிக்கிறது (Promotes Recognition)

மக்கள் தங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனங்களிலேயே வர்த்தகம் செய்துகொள்ள விரும்புவார்கள். நமது பிராண்ட் அனைவருக்கும் பரிச்சயமானது என்றால், நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவதற்கும், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வதற்கும், வாடிக்கையாளருக்கு மிகவும் எளிதாக இருக்கும். 

தனித்து நிற்கச் செய்கிறது (Helps to stand apart from the crowd)

இன்றைய உலகளாவிய சந்தை நிலையில், நம்முடனான போட்டியாளர்கள் இடையே நாம் தனித்து தெரிவது என்பது முக்கியமானதாகிறது. உலகளாவிய பொருளாதாரத்தில் நாம் நம்மைப் போன்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்களுடன், போட்டியிட்டு வெற்றி பெற நமது பிராண்ட் உதவுகிறது.

ஊழியர்களை ஊக்குவிக்கிறது (Motivates the Staff)

தெளிவான பிராண்டின் உத்தி, நமது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, எப்படி செயல்பட வேண்டும், வெற்றி பெற வேண்டும் மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது பற்றி விளங்க செய்து ஊக்குவிக்கிறது.

மற்றவர்களுக்கு பரிந்துரைக்க செய்கிறது (Generates Referrals)

பொதுவாகவே மக்கள் தங்களுக்கு ஒரு பிராண்டை பிடித்து விட்டது என்றால், அதை தானாகவே மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள். தாங்கள் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, கேட்கும் பாடல் எல்லாவற்றையும் தொடர்ந்து மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனால் நமது விற்பனை அதிகமாகும். 

வெற்றிகரமான பிராண்டை உருவாக்குவது எப்படி?

ஒரு வெற்றிகரமான பிராண்டின் தன்மைகளில் முக்கியமானது என்னவென்றால், அதற்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதும், அதை வாடிக்கையாளர்களிடம் முன்னிலைப்படுத்துவதும் ஆகும். வெற்றிகரமான பிராண்டை ஏற்படுத்துவதற்கு கீழ்க்கண்ட விதிகளை நினைவில் கொள்ளவேண்டும்.

நமக்கான வாடிக்கையாளர் யார் என்பதை அறிந்து கொள்ளுதல் (Know Your Audience)

ஒரு பிராண்டை உருவாக்குவதற்கு முன்பு, அதற்கான வாடிக்கையாளர்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நமது இலக்குக்கான வாடிக்கையாளர்களின் வயது, பாலினம், இருக்கும் இடம், வருமானம், கல்விநிலை, செய்யும் வேலை போன்றவற்றை பற்றிய ஒரு தெளிவான பார்வை இருந்தால் மட்டுமே,  அவர்களை சென்றடையும் சரியான வழியில், நமது பிராண்டை நிலை நிறுத்த முடியும்.

போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துதல் (Be Different)

நமது பிராண்டுக்கு ஒரு தனித்துவமான இடத்தை கொடுக்க, மற்ற போட்டியாளர்களிடமிருந்து நமது பிராண்ட் எந்த வகையில் வித்தியாசப்படுகிறது என்பதை, வாடிக்கையாளர்களுக்கு உணர்த்த வேண்டியது மிகவும் முக்கியமானது. மற்ற போட்டியாளர்களின் செயல்களையும் (Activities), உத்திகளையும் ( Strategy) முழுவதுமாக தெரிந்து வைத்திருத்தல், நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல அவசியமானது. அதே நேரத்தில், போட்டியாளர்களை வெல்வது மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நமது பிராண்டைப் பற்றிய தெளிவும், வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே, வெற்றிகரமான பிராண்டாக நிலைத்திருக்கமுடியும். 

வாடிக்கையாளரின் உணர்வுடன் ஒன்றக் கூடிய பிராண்டை உருவாக்குதல் (Connect with your customers)


நமது பிராண்டின் மதிப்பீடுகள் (Values) வாடிக்கையாளரின் உணர்வுகளோடு பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் (Emotions) உள்ளன. நமது பிராண்ட்  அந்த உணர்வுகளுக்கு உதவக் கூடியதாக இருந்தால் அதன் வலிமை மேலும் அதிகரிக்கும். 

வாடிக்கையாளரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் (Listen to your Customers)

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு நிறுவனம் வாடிக்கையாளரை தொடர்பு கொள்வதை மிக எளியதாக மாற்றி விட்டது. வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து கருத்துக்களை (Feedback) கேட்டுப் பெறுவதால், குறைகள் ஏதும் இருப்பின் நிவர்த்தி செய்யவும், வாடிக்கையாளர்களை சார்ந்த பிராண்ட் (Customer Oriented Brand) என்ற  இமேஜை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும். Read about டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்

வெற்றிகரமான பிராண்டிங்கின் சீக்ரெட்டுகள்


எந்த தொழிலாக இருந்தாலும் பிராண்டிங் என்பது மிகவும் முக்கியமானது. நமது தயாரிப்புகளில் இருந்தும், சேவையில் இருந்தும் வாடிக்கையாளர் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதையும், போட்டியாளர்களிடமிருந்து நாம் எந்த வகையில் வித்தியாசமானவர் என்பதையும், வாடிக்கையாளருக்கு நமது பிராண்ட் தான் சொல்கிறது.  பிராண்டிங்கில்  சில உத்திகளை (Strategy) கையாள வேண்டும். நமது பிராண்டை, எப்பொழுது, எங்கே, எப்படி, யாரிடம் கொண்டு சேர்க்கப் போகிறோம் என்பதை தெளிவாக திட்டமிடுவது இதில் மிக முக்கியமானது. பிராண்டிற்கான விளம்பரங்கள் (Advertisements) எங்கே செய்வது, விநியோகிப்பதற்காக  நாம் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (Distributing Channels) போன்ற உத்திகள் கட்டாயம் கையாளப்பட வேண்டியவை. இவைத்தவிர கீழே கொடுக்கப்பட்டவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறந்த லோகோ வடிவமைப்பு (Great Logo)

பிராண்டின் அடிப்படை லோகோ. ஒரு நிறுவனத்தின் லோகோ தான், அந்த நிறுவனத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான கருவி. பிராண்டின் குறியீடே லோகோ.


வாடிக்கையாளருக்கான செய்தி (Brand Message)

வாடிக்கையாளருக்கு, நமது பிராண்டை பற்றிய எத்தகைய தகவலை கொடுக்கப் போகிறோம் என்பதை தெளிவாக திட்டமிட வேண்டும்.

ஒருங்கிணைத்தல் (Integration of Brand)

நமது தொழிலின் மற்றும் நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், நமது பிராண்ட் எதிரொலிக்கும். வாடிக்கையாளர் உடனான தொலைபேசி உரையாடல், விற்பனைக்கான சந்திப்புகள், தகவல் தொடர்பு முறைகள் என்று, அனைத்துமே நமது பிராண்டில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே ஒவ்வொரு செயல்பாடும், நமது பிராண்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே இருக்க வேண்டும்.

பிராண்டுக்கான வாசகம் (Tagline)

நமது பிராண்ட் வாடிக்கையாளர்களை எளிதில் கவர, பிராண்டின் முழு சாராம்சத்தையும் (Essence of Brand) உணர்த்தக்கூடியதான வாசகத்தை உருவாக்க வேண்டும். எளிதில் மனதில் நிற்கக் கூடியதுமான, சுருக்கமான அர்த்தமுள்ள வாசகமாக அது இருக்கவேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் 'தின்க் டிஃபரண்ட்' (Think Different) எனும் வாசகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பிராண்டின் தரநிலை (Brand Standards)

பிராண்டை சந்தைப்படுத்துவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும், தயாரிக்கப்படும் அத்தனை பொருட்களிலும் (Marketing Materials) வண்ணங்கள், வடிவமைப்பு, லோகோவை எங்கு இடம் பெற செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை தீர ஆராய்ந்து செய்ய வேண்டும். ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பதைவிட, அழகியலோடு சீராக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

உண்மையாக இருத்தல் (Be True)

நாம் நமது பிராண்டின் மூலம் வாடிக்கையாளருக்கு அளிக்கும் வாக்குறுதிக்கு, உண்மை தன்மையோடு இருக்க வேண்டும். இல்லையெனில் வாடிக்கையாளர் நம்மிடம் மீண்டும் வரமாட்டார்கள். மற்றவர்களுக்கும் நம்மை பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

பிராண்டிங்கிற்கும் மார்க்கெட்டிங்கிற்கும் என்ன வித்தியாசம்?

மார்க்கெட்டிங் என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வணிகரீதியாக வெற்றி பெற ஊக்குவிப்பது. எங்கள் தயாரிப்பை வாங்குங்கள். ஏனெனில் இது மற்றவைகளை விட சிறந்தது என்று வாடிக்கையாளர்களை, நமது நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கத் தூண்டுவது மார்க்கெட்டிங் ஆகும். ஆனால் பிராண்ட் என்பது, ஒரு நிறுவனத்தை, அதன் தயாரிப்பு மற்றும் சேவையின் உண்மைத்தன்மையை, மதிப்பீட்டை உள்ளது உள்ளபடியே காட்டுவது. பிராண்ட், எங்கள் தயாரிப்பை வாங்குங்கள் என்று நேரடியாக சொல்லாது. உண்மைத் தன்மையை காட்டி தயாரிப்பை வாங்கவும், பரிந்துரைக்கவும் செய்யும்.

பிராண்டை முன்னிலைப்படுத்துவதில் விளம்பரங்களின் பங்கு

ஒரு பிராண்டின் இமேஜை (Brand Image) உயர்த்துவதில் விளம்பரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. விளம்பர நிறுவனங்களின் விளம்பர உத்தியாளர்கள் (Advertising Strategists), திட்டமிடுபவர்கள் (Planners) மற்றும் படைப்பாக்க குழுவினரால் (Creative Team), அந்த பிராண்டுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே, விளம்பர வழிமுறைகள் மூலமாக உணர்ச்சிபூர்வமான தொடர்பை (Emotional Bonding) ஏற்படுத்தும் வழிகள் கையாளப்படுகின்றன. 


Read about டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?

விழிப்புணர்வு ஏற்படுத்துதல் (Awareness)

பிராண்டின் பெயர் மற்றும் தயாரிப்பின் விலை போன்றவை பற்றிய  விழிப்புணர்வு, தொடர்ந்து விளம்பரங்களின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் விளம்பரங்கள் பிராண்டின் அம்சங்களை தெரிவிப்பதால், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. போட்டியாளர்கள் அதிகம் உள்ளதால் இத்தகைய விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது. 


தூண்டுதல் (Persuasion)

புதுமையான விளம்பர வாசகங்கள், காட்சிகள், கண்காட்சிகள், போட்டிகள் போன்றவற்றின் மூலமாக போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை விட,  நமது தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை தெரிவித்து நமது தயாரிப்புகளை வாடிக்கையாளர் வாங்கத் தூண்டுகின்றன.

நினைவூட்டல் (Reminder)

நமக்கான வாடிக்கையாளர்களுக்கு, நமது பிராண்டை பற்றிய நேர்மறையான எண்ணம் பதிவு ஆனபிறகு,

அவர்கள் தொடர்ந்து நமது பிராண்டை தேர்ந்தெடுக்க, அவர்களுக்குள் நமது பிராண்ட் பற்றிய நினைவூட்டல் அளிப்பது அவசியம். இத்தகைய நினைவூட்டல் விளம்பரங்கள் வாயிலாக நிகழ்கின்றது.

மதிப்பீடு (Brand Image)

நமக்கான வாடிக்கையாளர்களின் மனதில் நமது பிராண்டை பற்றிய, நேர்மறையான மதிப்பீட்டை விளம்பரங்கள் ஏற்படுத்துகின்றன. நிறுவனத்தின் விளம்பரங்களில் சொல்லப்படும் செய்தி, விளம்பரத்தில் தோன்றும் நபரின் ஆளுமை, விளம்பரங்களை கொண்டு செல்லும் விதம் போன்றவை, நமது பிராண்டை பற்றிய மதிப்பீட்டை அதிகரிக்கின்றன.

தலைமுறைகள் கடந்த நம்பிக்கை (Brand Loyalty)

நமது பிராண்டின் தயாரிப்புகளை, மற்றவர்களுக்கு பரிந்துரைக்கும் வாடிக்கையாளர் மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பின் வருபவர்களும் அந்த தயாரிப்புகளின் மீது நம்பிக்கையோடு, அவற்றையே தொடர்ந்து வாங்குவது மற்றும் உபயோகிப்பது போன்றவற்றிற்கு, விளம்பரங்கள் உறுதுணையாக இருக்கின்றன. உதாரணமாக சில பிராண்டுகளின் சோப்புகள், கூந்தல் எண்ணெய்கள், மசாலா பொருட்கள் போன்றவை தலைமுறைகள் பல கடந்தும் மாற்றப்படாமல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பிராண்டை உருவாக்கி, சீராக பராமரித்து வருவதால், நிறுவனத்துக்கும் தொழிலுக்கும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. பிராண்டின் மூலம் நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர் இடையே நீடித்த அங்கீகாரத்தை பெறுகின்றன. நல்ல பிராண்டின் மூலம் போட்டி நிறுவனங்களுக்கு இடையே, நம்முடைய நிறுவனம் நீடித்த வெற்றியுடன் நிலைத்து நிற்க முடியும். நமது பிராண்டை பற்றிய நல்ல மதிப்பீட்டை ஏற்படுத்திவிட்டால், புதிய தயாரிப்புகளை  எளிதாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும். Related Articles 
டிஜிட்டல் வழி சந்தைப்படுத்துதலில் வல்லுனர்களின் வழிகாட்டுதல் ஏன் தேவை?
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் நாம் செய்யும் தவறுகளும், அவற்றை சரிசெய்யும் வழிகளும்
Covid-19 வைரஸ் தொற்றால் டிஜிட்டல் மயமாகும் இந்திய வர்த்தக உலகம்
டிஜிட்டல் உலகில் பிசினஸ் டூ பிசினஸ்
ஸ்டோரி டெல்லிங் 
மார்க்கெட்டிங்பிராண்ட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

187 views0 comments